இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பஞ்சாப் உள்துறை திணைக்களம் நிறைவு செய்துள்ளது.
குறித்த தொடரானது நவம்பர் 11 முதல் 27ஆம் திகதி வரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த தொடருக்குக் குறைபாடற்ற பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, காவல்துறைக்கு உதவுவதற்காகப் பாகிஸ்தான் இராணுவம், ரேஞ்சர்கள் (Rangers) மற்றும் விமானப்படை பிரிவுகளின் சேவைகள் கோரப்பட்டுள்ளன.
மேலதிகமாக லாகூரில் வான்வழி ஆதரவு வழங்குவதற்காக இராணுவ விமானப்படை உலங்கு வானூர்திகளும் அழைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாதுகாப்புப் படையினர் இன்றிலிருந்து பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
மேலும் போட்டிகள் நடைபெறும் காலத்திலும், அணிகள் தங்கும் மற்றும் பயணம் செய்யும் நேரங்களிலும், முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதற்கான ஒப்புதலைக் கோரி, பஞ்சாப் உள்துறை திணைக்களம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முறையான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அணிப் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகளை விரைவாக இறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
