முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கடந்த 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ரணிலை அன்றையதினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின்னர் சுகயீனமடைந்த ரணில் அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எனினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐந்து விசேட வைத்தியர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருகிறது.
அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் அந்தக் குழு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.
இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் வழக்குத் திகதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் உள்ள கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் முதல் திருப்பமாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? இல்லையா என்று நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.