நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுவன் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குடாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தணமல்வில - வெல்லவாய வீதியில், நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாயவிலிருந்து தணமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் பலத்த காயமடைந்து தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 07 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை - புல்மோட்டை வீதியில், நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து குச்சவெளி நோக்கி பயணித்த கேப் ரக வாகனமொன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் அதில் பயணித்தவரும் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் திரியாய பகுதியைச் சேர்ந்த 65 மற்றும் 75 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
