தாய்லாந்து தமது மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை இறுக்கமாக்கியுள்ளது.
இதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகள் உட்பட, பகல் நேரங்களில் மது அருந்துபவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மது அருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் நேற்று (8) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
இந்தத் தடையை மீறுவோர் பிடிபட்டால், அவர்களுக்கு 10,000 பாட் (இலங்கை நாணய மதிப்பில் சுமார் 94 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் ஊடாக முன்னதாக மதுபான விற்பனையாளர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மது அருந்தும் நுகர்வோர் மீதே அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த சட்டத்தின்படி, வாடிக்கையாளர் ஒருவர் பிற்பகல் 1:59 க்கு மதுபானம் வாங்கி, அதை 2 மணிக்கு குடித்தாலும் அது விதிமீறலாகக் கருதப்படும்.
எனவே, குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் மதிய உணவு வேளையின்போது மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இருப்பினும், உரிமம் பெற்ற கேளிக்கை விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற சுற்றுலாப் பகுதிகளில் உள்ள சில நிறுவனங்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
1972 ஆம் ஆண்டளவில் இந்தத் தடை வேலை நேரத்தில் மது அருந்துதலைத் தடுக்க கொண்டுவரப்பட்டது.
எனினும், தற்போது, அது பொதுச் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மது தொடர்பான தீங்கு குறைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு வலுப்படுத்தப்பட்டு, அமுலாக்கமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
