பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

  பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெரிஸ் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



agp Win News


லிபியாவின் நிதியைப் பயன்படுத்தி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின்போது, தன்னுடைய பிரசாரத்திற்கு நிதியளிக்கும் திட்டத்தில் குற்றவியல் சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி குற்றவாளி என இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கும் நீதிமன்றம், ஒரு ஆச்சரியமான உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது. அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும்கூட சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. மேலும், அவரது தண்டனை தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 70 வயதான சர்கோஸி, கைவிலங்குடன் நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கும் வகையில், தண்டனை தொடங்கும் திகதி பிறகு அறிவிக்கப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.




கடந்த 2005 முதல் 2007-ஆம் ஆண்டு வரை இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர உதவிகளை மேற்கொள்ளவும், அதற்கு ஈடாக லிபியாவின் நிதியைப் பெற்று, 2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது தொடர்பான சதித்திட்டத்தில் தொடர்பு கொண்டிருந்தது நிரூபிக்கப்பட்டிருப்பதால், சர்கோஸி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.