மாலைத்தீவு சென்றடைந்த ஜனாதிபதி - அரச மரியாதையுடன் வரவேற்பு

  

agpwin News

மாலைதீவுக்கான  உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  இன்று (28) முற்பகல் மாலைதீவின் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.



அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை  அந்நாட்டு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு வரவேற்றார்.



ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக மாலைதீவு வெலானா சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழுவொன்று அழகிய கலாசார நடனத்தை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அந்த சிறுமிகளுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Dr Mohamed Muizzu) தலைமையில் மாலைதீவின் தலைநகரான மாலேயில் உள்ள குடியரசு சதுக்கத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.


மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரிலே  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 




மாலைதீவை சென்றடைந்த ஜனாதிபதி ஜூலை 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மாலைதீவு ஜனாதிபதி உட்பட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.



அத்துடன்  இலங்கை - மாலைதீவு பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன.




மேலும் மாலைதீவின்  இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்யும் வர்த்தக மன்றத்தை சந்தித்து, உரையாற்றவும் மற்றும் மாலைதீவில் வாழும் இலங்கையர்களைச் சந்திப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.




வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த  விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்று  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.